ஞாயிறு, 17 நவம்பர், 2013

சேவைக்குப் பாராட்டு - முஸ்தாக் அஹ்மத்



காயல்பட்டணம் மார்க்கக் கல்வி நிறுவனம்
ஹாமிதிய்யா பைத்து சபாவின் முதல்வர் ஹாஜி நூருல் ஹக் அவர்களுக்கு தமிழ் இஸ்லாமிய இலக்கிய மன்றம்  வழங்கிய சேவை செம்மல் விருதுக்கு இந்த மாணவனின் பாராட்டுக்க் கவிதை.

 உண்மையின் வெளிச்சமே!




ஹாமிதிய்யா எனும் ஆலமரத்தின்
ஆணிவேரே !

முதல்வர் என்ற சொல்லுக்கு
முகவரி தந்தவரே!

சேவை செம்மலே

ஒரு விழுதுக்கு விருது வழங்கி
இஸ்லாமிய தமிழ் இலக்கிய மன்றம்
பாராட்டுகளைப் பதிவு செய்து கொண்டது.

ஆனால்  அதற்கு முன்பே,
புனித பூமியில்.. புண்ணியம் நிறை கபாவின்
கதவுகள் திறந்து
மன்னர்களுக்குத்  தரும் மகிமை தந்தான்
அர்ஷின் கீழ் நிற்க வைத்து
அல்லாஹ்வே அழகுப் பார்த்துக்கொண்டான்.

இது
அல்லாஹ் அளித்த
அழகிய விருது.


வார்த்தைகளைத்  தேடித் தேடி
வாழ்த்துச் சொல்ல வந்தேன்

முதல்வரே!

என் வாழ்க்கையையே
வாழ்த்தாய்
சமர்ப்பித்துக் கொண்டேன்.

80 களின்
அனேக இளைஞர்களின் ஞாயிறு என்பது
தங்கம் தியேட்டரோடு தஞ்சமாகிப் போனது.

ஹாமிதிய்யாவின் அறிமுகத்தால்
தங்கம் தியேட்டரே ஹரமாஹிப் போனது.

அது ஒரு காலம்..

திருமண வீடென்பது
திரைப்படப் பாடல்களால்  அறியப்பட்டது,
மாப்பிள்ளை ஊர்வலம்
மேளதாள ஆரவாரம்.

ஆலிம்களின் அறிவுரைகள்
அக்கறையோடு கேட்கப்பட்டது.

அக் கறையோடு  நிறுத்தி வைக்கப்பட்டது.

ஹாமிதிய்யா அறிமுகப்படுத்தியது.
பண்பாடும் பைத் பிரிவு.

சப்தமில்லாமல் அரங்கேறியது.
ஒரு சமுதாயப் புரட்சி.

திரைப்படப் பாடல்களுக்குத் திரை
மேள தாளங்களுக்குத் தடை.

இது
இன்னும் தொடரும்
புனிதப் புரட்சி.

பத்தாம் வகுப்புப் படித்தான்,
ஒதுவேளை ஒதுங்கிப் போனது.

+2 சேர்ந்தான்,
மார்க்கக்கல்வி மறைந்து போனது.

கல்லூரி  சேர்ந்தான்,
தொழுகைத் தொலைந்து போனது.

ஹமிதிய்யா அறிமுகப்படுத்தியது.
அழகான ஹிப்ளுப் பிரிவு,

பட்டாதாரிகள்  -  ஹிப்ளு மாணவர்கள்.
மருத்துவர்கள்  -  ஹிப்ளு மாணவர்கள்.
என்ஜினியர்கள் -  ஹிப்ளு மாணவர்கள்.

இது
ஹாமிதிய்யவின்
மகிமைப் பொருந்திய
மார்க்கப் புரட்சி.

காலம் கட்டிவைத்த மாயத்தை
கடமை கொண்டு அகற்றியவர்.

தீயாய் திரிந்த
இலக்கற்ற இளைஞர்களின்
கறுப்புக் கனவுகளின் கூடாரத்தின் மீது
கல்லெறிந்தவர்.

ஒழுக்கத்திற்கே ஒழுக்கம்
சொல்லித்தந்தவர்.

இவரிடம்
அன்புக்கும் பேதம் கிடையாது.
அடிக்கும் பேதம் கிடையாது.



உயர்வு தாழ்வின்றி, உறவு பேதமறுத்து
சொர்க்கத்திற்கு
சொந்தங்களைச்  சேர்த்தவர்.

மார்க்கம் சொல்லித் தந்தார்........
நல்ல இஸ்லாமியரானோம்.....

மார்க்கம் புனிதம் சொல்லித்தந்தது..
நல்ல
இந்தியனானோம்.

உண்மையின் வெளிச்சமே!
உண்மையில்
நீங்கள்தான் எங்களின் வெளிச்சமே.!

மார்புப் பால் புகட்டியவள்  தாயானால்,
மார்க்கப் பால் புகட்டியதால்
நீவிரும்
எங்களின் தாயே!

வியாழன், 10 அக்டோபர், 2013

உழைப்பின் அடையாளம் - அல்மஹா டவர்




 முத்துப்பேட்டையின் முகவரி........

ஒரு தனி மனிதனின் 
நம்பிக்கையில் தொடங்குகிறது.
இந்த வெற்றியின் முதல் வரி...

அல்லாஹ்வின் மீது கொண்ட 
அசையாத நம்பிக்கை 
தோல்விகளில் கற்றுக்கொள்ளும் 
துவளாத மனசு...
உயரங்களில் கூட 
தரையில் அழுந்த நிற்கும் பாதங்கள்...
பணங்களை எண்ணும் போதே 
பசித்தவர்களையும் எண்ணும் 
பரோபாகாரம்........
காற்றெங்கும் காந்த அலைகளாய் 
பரவிக்கிடக்கும் இவருக்கான துஆக்கள் 
பல பாடங்கள் சில வெற்றிகளை நிச்சயிக்கிறது.....
சில வெற்றிகள் பல பாடங்களை பதிவு செய்கிறது.....
இந்த வெற்றியின் பெயர்
ஹைதர் அலி............





ஞாயிறு, 6 அக்டோபர், 2013

முஸ்லிம்களின் புனித இல்லம்........






மூமாவிர்க்கான முத்தங்கள் ...

புனித ஹஜ் முடித்து தாயகம் திரும்பும் தன் பாச மூமாவை வரவேற்கும் காயல் பேத்தியின் வாழ்த்துக் கவிதை - முஸ்தாக் அஹ்மத்


மனிதன் படைக்கப் படுவதற்கு- முன்பே
மலக்குகளால் கட்டப்பட்ட
மகத்தான கட்டிடம்...

பூமியின் மத்திய ரேகை..........

உலகமெல்லாம் இருண்ட பின்பும்
ஒளி படர்ந்த உன்னத இல்லம்.

பூமியினரின் வணக்கதிற்காய்
வல்லவன் வகுத்த
புனித ஸ்தலம்

உலக முஸ்லிம்களின் - முதன்மை
வணக்கஸ்தலம்.............

மலக்குகளின் நிரந்தர
வாசஸ்தலம்...................

பூமியின் சுவர்க்கம்……….

உலக முஸ்லிம்களுக்கெல்லாம் ஒரு உன்னத ஆசை
நிரந்தரமாய் நெஞ்சினில் உண்டு.

வாழ்வின் ஒருமுறையேனும் அல்லாஹ்வின் அழகிய வீட்டையும்
அஹ்மது நபியின் அருள் நிறைந்த கோட்டையையும்
தரிசிக்க வேண்டும் ...... என்ற தணியாத தாகம்

வாழும்போதே வரம் வாங்கி வந்த என் ஆருயிர் கம்மா.........
அல்லாஹ் விரும்பிய அற்புத ஹாஜிம்மா............

வாழ்ந்தவர்களே வாழ்த்துச்சொல்லி வரவேற்பர்.....
ஆனால் நானோ .........

வாழ்த்துச்சொல்லி வாழ ஆசைபடுகிறேன்.

மார்க்கத்தின் தந்தை.........
மகத்துவம் நிறை இப்ராஹீம் நபியின்
சரித்திர சான்றுகளை சந்தித்து

அஹமத் நபியின் ஆகிர் சொர்பொளிவினால்
மன்னிக்கும் மலை என்று
அறியப்பட்ட அரபா மலையில் தவம் இருந்து
பிழைகள் எல்லாம் பொருக்கப்பட்டவளே........

முஜ்தலிபாவில் கைகளால் கல்பொறுக்கி
முதன்மை சைத்தானை
இதயம் கொண்டு விரட்டி அடித்தவளே..............

தவாபுல் சியாராஹ்வில் தொடங்கி
தவாபுல் விதாவில் -
எல்லா பாவங்களுக்கும் விடைகொடுத்தவளே.............

பாவங்கள் மன்னிக்கப்பட்டு
இரண்டாம் முறை பிறந்தவளே....

ரஹ்மானின் ரபீக்
ரவ்ழா ஷரீபின் ரஹ்மத்
மக்களின் மன்னர்
மன்னர்களில் மனிதர்...
மஹ்மூது நபியை மதினாவில் தரிசித்தவளே...........
இதயம் நிறைந்த இறுதி தூதரின்
இல்லத்தரசிகளை இதயம் கொண்டு கண்டவளே.............

ஜன்னத்துல் பகீயில் வாழும்
சுவனத்த்துப்பூக்களான
சுந்தர ஷஹபாக்களை
சலாம் சொல்லி சந்தித்தவளே..............
ஹாஜிம்மாவே.............எங்கள்
அழகிய கம்மாவே...................

அத்தனை வரத்திற்க்கும்.................
என்
ஒற்றை முத்தத்தை............
வாழ்த்தாய் வழங்குகிறேன்..............

நீ தழுவிய - இஸ்லாத்தின்
ஐந்தாம் தூணை
நானும் தழுவ
அல்லாஹ்விடம் வரம் வாங்கித்தா..............

உனக்கான ஈர முத்தம்.........

பரிசுகளாகவும்......... பாசங்களாகவும்
என்னுள்..............எப்போதும்...............
காத்திருக்கும்................

நன்றி  காயல்பட்டினம்.காம்.
வெள்ளி, நவம்பர் 9, 2012 அன்று வெளியிடப்பட்ட என் கவிதை

ஞாயிறு, 14 ஜூலை, 2013

ரய்யான் கதவின் சாவி...


 


 

 

இதோ இன்னுமொரு ரமலான்.......
இதோ இன்னுமொரு ரஹ்மத்.............

பிறை கண்டு கொண்ட பேரானந்தம்.............
அல்லாஹ்வின் அட்சய பாத்திரம்
இஸ்லாத்தின் நான்காம் தூண்
இஸ்லாமியர்களின் ஆரோக்கிய தேன்.......

சொர்கத்தின் முகவரி....

ரய்யான் கதவை கடக்கும் ரகசியம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட நோன்பாளிகளுக்கு
அல்லாஹ் அளித்த அருட்கொடை..........

ஆயிரம் ஆயிரம் முறை கேட்டாலும் இன்னும் அதிசயமாகவே தோன்றும் லைலத்துல் கத்ர் இரவும் அதன் ஆயிரம் மாத நன்மைகளும்...

இருளகற்றும் இறைமறை
திறக்கப்பட்ட சொர்க்கம்.........
மூடப்பட்ட நரகம்...........
முடக்கப்பட்ட சைத்தான்

கஸ்தூரி மணம்..
வணக்கமாகும் உறக்கம்..........
ஹஜ்ஜாகும் உம்ரா...........

நன்மைகள்....
பெருகும் ஒன்றுக்கான பத்துக்கள்..........

கேட்டதும் கேட்டுக்கொண்டே இருப்பதுமான
ரமலான் குறித்த ஹதீஸ்களின் தொகுப்புகள்
சொல்லிவிடும் -இன்னும் மிச்சமிருக்கும்
சொர்க்கத்திற்கும் நமக்குமான தூரத்தை.................

நீண்டு விரிந்து கிடக்கிறது
அமல்கள் குறித்த கேள்விகளும் - அதன்
பயன்களை அடையும் தூரங்களும்.............

நோன்பிற்கும் பட்டினிக்குமான இடைவெளி
வணக்கங்களால் மட்டுமே நிரப்படுகிறது.........

கொடுத்தல் என்பதின் புரிதலின் குறைகள்
எஜமானர்களின் வீட்டின் முன் நீளும்
ஏழைகளின் வரிசைகளில்
நிறைந்து கிடக்கிறது.

சகோதர சண்டைகளுடனே
லைலதுல் கத்ரின் தேடல்.....
புரிந்தும் புரிய மறுக்கும் தொடரும்
மனித முரண்களின் தொடர்..........

விடியல் சொல்லிவிடும் ஆயுளின்
நிச்சயத்தை...........

பாவ மன்னிப்பிற்காய்
படைத்தவன் கொடுத்த பாக்கியம்.........

இந்த நிமிடத்தின் நிஜத்திலும்
இருப்பின் நிச்சயத்திலும்
ரமலானை வரவேற்பதோடு............
மிச்ச மிருக்கும் துஆக்களை
மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் மனது............

காலராவிலும் கான்செரிலும்
காணமல் போனது - எங்கள்
மருத்துவத்தின் மகத்துவம்................

உன்னிடம் சரணடைவது ஒன்றே உத்தமம்..............
காப்பாற்று................ கதறும் குரல்களை காதிலேற்று............

குறைந்த வணக்கங்களோடு
அருகதையற்ற விண்ணப்பம் .....
இருப்பினும்
கருணையாளனே.................
குறைகொண்ட வணக்கங்களை
நிறையாக்க- ரமலான் எனும் ரஹ்மத்
இறக்கி ரசித்தவனே...............

நோயில்லா சந்ததிகள் கொடு.........
உயிர் கொண்டு போகும் நோய்கள் தவிர்........
தாங்கும் சக்தி கொடு.......... தடுக்கும் மருந்து கொடு........

மன்னிக்கப்பட்ட பாவங்கள்..
மீண்டும் படராத மனம் கொடு............

ஜக்காத் கொடுக்க ஏழைகள் தேடும் இஸ்லாமியர்கள்..........
இம்மையில் நோன்பு திறக்கும் போது குளிர்ச்சி மறுமையில் உன்னை சந்திக்கும்போது மலர்ச்சி இவையாவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆவாய் இப்போதே வேண்டும்..........

அத்துடன்...... இம்மையில்
இனிவரும் பெருநாளையாவது - என்
பால்ய தோழனோடு கொண்டாடும் பாக்கியம் வேண்டும்.........

வரங்கள் கொண்டு வரும் ரமலானே வருக...............

உலக முஸ்லிம்களின் - ஈருலக வாழ்க்கை முழுதும் வசந்தங்கள் தருக.....................

வெள்ளி, 14 ஜூன், 2013

ஜும் ஆ









ஜும்
மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை கண்டு
மலக்குகளே ஏங்கும் நாள்...
பணம் கொண்டு வருடம் ஒருமுறை கிடைக்கும் நன்மைகளை
மனம் கொண்டு வாரம் ஒரு முறை பெற
அல்லாஹ் அளித்த வரம்

ஒட்டகத்தின் ஒருபகுதியை தானம் கொடுக்க
ஓராயிரமாவது வேண்டும்.
ஏக்கமாகிப்போன ஏழைகளுக்கு
வாரம் ஒரு முழு ஒட்டகத்தின் நன்மை
கற்பனைக்கு அப்பால் உள்ள புனித பயணம்
கண்ணுக்கு முன்னாள் நிறைவேறும் அதிசயம்..
ஏழைகளின் ஹஜ்,

இவ்வளவு நன்மையும் இன்றே கிடைக்குமென்றால்
அது
இஸ்லாமியர்களின் பெருநாள் தானே.

வியாழன், 13 ஜூன், 2013

வரம்



ஒவ்வொரு விழித்தலின் பின்னும் பாவ மன்னிப்பிற்கான பாதை திறந்தே கிடக்கிறது....
அடுத்த உறக்கம் என்பது மரண தழுவலாய் கூட மாறிவிடலாம்.....
இந்த நிமிடம், இந்த இருப்பு, இந்த சுவாசம்...
அல்லாஹ் கொடுத்த வரம்..
பாவமன்னிப்பு ஒன்றே தவம்
பிழைத்துக் கிடப்பதே வரம்.

மாறி விட வேண்டும்






மாறிவிட வேண்டும்,
வண்ணங்களின் கூட்டத்தில் நிறமாய்
பூக்களின் தோட்டத்தில் மணமாய்
பறவைகளின் பயணத்தில் சிறகுகளாய்
குழந்தைகளின் உலகத்தில் புன்னகையாய்
நிலத்தில் வீழ்ந்த பின்பும் தன்னியல் மாறா மழையாய்
மாறிவிடத்தான் வேண்டும்.


போதை மரம்.





இங்கே வானம் 
நிறைய  பேருக்கு - போதி மரம் 

ஆனால் - எனக்கோ 
போதை மரம்.

மேகம் தழுவிய வானத்தோடு 
மோகித்து கிடக்கிறேன் ..

மேகம் கழுவிய வானத்தோடு 
ஊடலாகிறேன் ..

வானம் பார்த்து சில சமயம் 
கதறி அழுகிறேன் ...

வானம் பார்த்து  சில சமயம் 
சிரித்து மலர்கிறேன் .



இங்கே வானம் 
நிறைய  பேருக்கு - போதி மரம் 

ஆனால் - எனக்கோ 
போதை மரம்.


கூடு







 இந்த உலகம் இறைவனின் கூடே..

தற்காலிகமாய்,
தங்கிச் செல்லும் பறவைகளே நாங்கள்...

கருணையின் கரங்கொண்டு காப்பவனே,
சிறகு கொடு...